
நான் பார்த்தவரையில் சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களும், அதாவது 15-20 வயதிற்குள், தாமதமாக திருமணம் செய்துகொண்டவர்களும் ஓரளவு சமமான வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். ஆனால் யார் இடத்தில் சிறிது ஏமாற்றமும் வருத்தமும் இருக்கிறது என்றால், அது நிச்சயமாக சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களில் தான் உள்ளது என்பேன்.
நான் திருமணம் ஆகாத பெண் தான். இருந்தும் என் மனதிற்கு தோன்றும் சில எண்ணங்களை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். யாராக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் திருமண வாழ்வைப் பற்றிய கனவுகளும் எதிர்ப்பார்ப்புகளும் இருக்கதான் செய்யும். ஆனால் 18 வயதில் இருந்த எதிர்பார்ப்புகள், ஒரு 28 வயதை அடைந்த பிறகும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி இருக்க, நான் பார்த்தவரையில் பல திருமணங்கள் முறிந்துபோக காரணமாக இருப்பது இதுபோல மாறிக்கொண்டே இருக்கும் மனப்போக்குதான். மனம் ஒரு நிலையான சமமான இலக்கை அடையும்வரை நாம் எடுக்கும் சில முக்கியமான முடிவுகள் தவறாக போவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஆண்களின் எண்ணங்கள் எவ்வாறு மாறும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்புகள் எப்படி மாறும் என்று என்னால் ஓரளவுக்குச் சொல்ல முடியும்.
15-18 வயது பெண்கள்: தமிழ், ஹிந்தி, ஆங்கில திரைப்படங்களின் தாக்கம் சிறிது இருக்கும். திரைப்படங்களில் வரும் காதலன் தன் காதலிக்காக ஏழு கடலையும் தாண்டி வருவான், உயிரையே கூட கொடுப்பான் என்றால், அப்படிப்பட்ட அழியா காதலில் ஒரு சிறு அளவாவது வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்த வயது பெண்களுக்கு இருக்கும். நீங்கள் இந்த வட்டத்தில் இல்லை என்றால், நிச்சயம் நீங்கள் exception என்று தான் நான் கூறுவேன். இந்த வயதில் பெண்களின் உடலில் பல உயிரியல் மாற்றங்கள் ஏற்படும். ஹார்மோன்களின் தாக்கமும் இதில் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை சரியான அறிவு-சார்ந்த முடிவுகளை எடுக்கவிடாமல், மனம் போகும் போக்கில் தான் முடிவுகள் எடுப்பர். இந்த வயதில் பல பெண்கள் தவறுதலான முடிவுகளை அவசரமாக எடுத்துவிட்டு வாழ்க்கையே தொலைத்த கதைகளும் உண்டு.
இந்த வயதில் தான் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். நம் கலாச்சாரத்தில் இந்த பழக்கம் ஒரு காலத்தில் மட்டும் அல்ல, இன்றும் சில கிராமங்களில் இது இருக்கிறது. கல்வி கற்கும் வயதில் திருமணம் செய்து வைத்துவிட்டு, “நீ கல்யாணம் பன்னிட்டு கூட படிக்கலாம்” என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? திருமணம் முடிந்த பிறகு அந்த பெண் கணவனைக் கவனிப்பாளா இல்லை புத்தகத்தை கவனிப்பாளா? உடலளவில் அவள் தயாராக இருப்பினும், மனதளவில் அவள் இன்னும் வளரவில்லை. ஏன் என்று சொல்கிறேன், நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள்.
19-25 வயது பெண்கள்: நாம் சுமார் 25 வயது அடையும் வரை மூலை வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இந்த மூலை வளர்ச்சி பின்புரம் தொடங்கி, முன்புரம் நிறைவடையுமாம். கடைசியாக வளர்ந்து நிறைவு பெறும் மூலையின் பாகம் prefrontal cortex என்று அழைக்கப்படுகிறது. இந்த பாகம் நம் கண்கள் மற்றும் நெற்றிக்குப் பின்னால் இருக்கிறது. சரி எது தவறு எது என்பதை வேறுபடுத்தி பார்ப்பது, முரண்பாடான எண்ணங்களை சரியாக வேறுபடுத்தி முடிவு எடுப்பது, எதிர்கால விளைவுகளை சரியாக கணிப்பது, எல்லா விஷயங்களையும் உள்வாங்கி அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கும் திறன் போன்ற செயல்பாடுகளை, இந்த prefrontal cortex பாகம் தான் நிறைவேற்றுகிறது. நீங்களே சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு புரிய வரும். நாம் 19-25 வயது காலத்தில் எடுத்த முடிவுகளை பின் நோக்கி எண்ணிப்பார்த்தால், இன்றும் நாம் அதே முடிவை எடுப்போமா? இதை நீங்கள் மட்டும் தான் சொல்ல முடியும்.
இந்த காலகட்டம் திருமண வயது என்று பலரும் கூறுவர். இந்த வயதில் இருக்கும் பெண்ணுக்கு என்ன எதிர்ப்பார்ப்புகள் இருக்கும்? எதிர்கால கணவன் நன்றாக படித்து, நல்ல வேலையில் இருக்க வேண்டும், அன்பாக பேச வேண்டும், எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும், தினமும் வெளியே அழைத்துப்போக வேண்டும். அவன் உலகில் நான் மட்டுமே இருக்க வேண்டும், என் உலகில் அவன் மட்டுமே இருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருவருக்குமே கூட இருக்கலாம், இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் சிக்கல் எங்கே இருக்கிறது என்றால் “எதிர்ப்பார்ப்பு” என்ற சொல்லில் தான் உள்ளது.
நாம் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்ப்பார்ப்புகள் வைத்துக்கொள்ளலாம், ஆனால் நாம் எதிர்ப்பார்ப்பது எல்லாமே நடந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையோடு அடியெடுத்து வைப்போம் இந்த காதல் உறவில். இது இயலாத காரியம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தான் நாம் உணர்வோம். அதாவது, அறிவியல் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், prefrontal cortex வளர்ச்சியடைந்த பிறகு நமக்கு உண்மை புலப்படும். அதற்குள் அந்த பெண்ணுக்கு திருமணமும் ஆகிவிடும். சிறிது காலம் கடந்தும் போய்விடும். பொருப்புகளும் அதிகரித்துவிடும். அதற்கு பிறகு தினமும் டூயட் பாடிக்கொண்டே இருக்க முடியுமா? எனக்கு தெரிந்து என் தோழிகள் மற்றும் உறவினர்களில் சிலர், எதிர்ப்பார்த்தது ஒன்று, உண்மையில் நடந்தது வேறு என்று ஏமாந்து, தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு வந்துவிட்டனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இனி இன்னொரு திருமணம் செய்யும் மனப்பான்மையில் அவர்கள் யாரும் இல்லை. இது போன்ற சிக்கல் நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்கிறேன்.
>25 வயது பெண்கள்: அறிவியல் ரீதியாக பார்த்தால், மூலை வளர்ச்சி முழுமை பெறுவது 25 வயது அடைந்த பிறகே. 25 என்பது ஒரு அளவுகோள் தானே தவிர, ஏதோ முன்னும் பின்னும் ஒரு வருட காலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். இந்த வயது பெண்கள் ஒரு வித தெளிவான சிந்தனையை அடைவார்கள். ஒரு 3-4 வருடங்கள் வேலை செய்திருப்பார்கள். இல்லையெனில் மாஸ்டர்ஸ் அல்லது எம்.பி.ஏ பட்ட படிப்பு முடித்திருப்பார்கள். முக்கியாமான ஒரு குணம் இவர்களுள் இருக்கும். அதாவது தன்னைப் பற்றிய புரிதலும், சுயமரியாதையும் இவர்களிடையே இருக்கும். மற்றவர்களை, குறிப்பாக ஆண்களை, புரிந்துகொள்ளும் தன்மை இவர்களுக்கு வந்துவிடும். எப்படிப்பட்ட வாழ்க்கை துணை தனக்கு அமைந்தால் வாழ்வில் சந்தோஷமாக இருக்கலாம் என்று யோசித்து முடிவெடுப்பார்கள். சொத்து, வருமானம், சுகமான வாழ்வு முறை பார்த்து இந்த துணை தேடல் இருக்காது. ஒரு பக்கம் அந்த விதமான எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும், துணைவனின் குணத்தையும் முக்கியமாக கருதுவார்கள்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
இந்த 25 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றுதான்:
“எதிர்ப்பார்ப்பு” (expectation) என்ற வார்த்தையை விட்டுவிட்டு, “தரம்” (standard) என்ற வார்த்தையைப் பயன்படுத்த தொடங்குங்கள். உங்கள் தரம் என்ன என்பதை நீங்கள் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். “தரம்” என்ற சொல்லை பயன்படுத்துவதால், நான் ஏனோ உங்களை ஆனவத்தோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. “என் வாழ்க்கையை நான் சில கொடுள்கைகளோடு தான் வாழ்வேன். யாருக்காகவும் என் தரத்தை குறைத்துக்கொண்டு, என் கொள்கைகளை விட்டுக்கொடுத்து வாழமாட்டேன். எனக்கு சரி என்று தோன்றினால் மட்டுமே நான் எதையும் செய்வேன். என் சுயமரியாதையை நான் இழக்கும் வகையில் நடந்துக்கொள்ளமாட்டேன்.” – இப்படி “தரம்” என்பதற்கான பொருளாக எடித்துக்கொள்ளலாம்.
நீங்கள் முதலில் உங்களை நன்றாக புரிந்திருக்கிறீர்களா?
உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அறிவீர்களா?
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு எத்தனை நன்பர்கள் இருக்கின்றனர்? அவர்களை இன்னும் தொடர்பில் வைத்திருக்கிறீர்களா?
நீங்கள் மட்டுமே சந்தோஷமாக அனுபவிக்கும் பொழுதுபோக்கு உங்களுக்கு இருக்கிறதா?
உங்களால் தனியாக மற்ற நாடுகளுக்கு பயணிக்க முடியுமா? அல்லது, பக்கத்து ஊருக்காவது தனியாக பயணிக்க முடியுமா?
உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆர்வம் காட்டியதுண்டா?
உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி தினமும் படித்து தெரிந்துகொள்வீர்களா?
“உங்க பேர் என்ன? உங்களைப் பற்றி எதாவது சுவாரசியமான விஷயம் என்ன சொல்லுங்க?” என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
“நான் இந்த உலகைவிட்டு பிரியும் பொழுது, குறைந்தது பத்து பேராவது ‘ஓ’ என்று ஒப்பாரி வைத்து அழனும்.” என்று எண்ணி, எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்து பார்த்ததுண்டா?
இது போன்ற பல கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தேடுவதிலே வாழ்க்கையின் சுவாரசியம் உண்டு, என்பது என் தாழ்மையான கருத்து. ஆண்களும் சரி, பெண்களும் சரி, நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக தன்னைப் பற்றின விஷயங்கள் தெரிந்திருக்க வேணடும். முதலில் நான் என்னை நேசிக்க வேண்டும், நான் என்னை மதிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் என்னை நேசிப்பார்கள், என்னை மதிப்பார்கள். மற்றவர் பார்வையில் நான் குன்றிப்போவதை நான் பொருட்டாக எண்ணியதில்லை. ஆனால் நான் என் பார்வையில் குன்றிப்போகக்கூடாது. என் “தரம்” என்ன என்பதை நான் உணர்ந்தால்தான், அதற்கு ஏற்றார்போல் என் துணைவனின் “தரம்” சமமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான கணவன்-மனைவி உறவின் மிக முக்கியமான அங்கமாகும். குறைந்த சுயமரியாதை கொண்டவர்கள் தங்கள் உறவுகளை அழிக்க முனைவார்கள். தாழ்ந்த மனப்பான்மை கொண்ட பெண்கள் இன்னொருவரிடம் இருந்து கிடைக்கும் அன்பிற்கு நான் தகுதியானவளாக இருக்க முடியாது என்று நினைத்து தங்கள் வாழ்வை அவர்களே அழித்துக்கொள்வார்கள். இதுபோன்ற மனப்பான்மை இருந்தால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.
இதில் இன்னொரு விஷயத்தையும் பெண்கள் மறந்துவிடுகிறார்கள். நம் இந்திய சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் தனித்தே வாழ்கிறார்கள். ஆகையால் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். ஆண்கள் எப்படிப்பட்டவர்கள், ஆண்களின் உயிரியல் சார்ந்த தகவல்கள், ஆண்களின் மனம் எப்படி செயல்படும், இது போன்ற விஷயங்களைப் பெண்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும், முக்கியமாக திருமணத்திற்கு முன்பு. ஆண்களும் நம்மை போலவே சக மனிதர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நான் மேலே கூறிய நிறைய விஷயங்கள் ஆண்களுக்கும் பொருந்து என நம்புகிறேன். ஆண்களைப் பற்றிய சில தகவல்களையும் என்னால் சொல்ல முடியும், ஆனால் அதை ஆண்களே சொன்னால் மிக நன்றாக இருக்கும். ஒன்றே ஒன்று மட்டும் சொல்லலாம். ஆண்கள் பெண்களைப் போல் சிக்கலானவர்கள் அல்ல. ஆண்களை கொஞ்சம் எளிமையாக புரிந்துக்கொள்ள முடியும். ஆகையால் பெண்கள் சுலபமாக ஒரு ஆணோடு வாழ்ந்துவிட முடியும். ஆணுக்குதான் ஒரு பெண்ணோடு வாழ்வது கடினம்.
~ப்ரியா~