‘பெண்களின் மாதவிடாய் என்பது தீட்டு’ – உண்மை என்ன?

பண்டைய காலத்தில் இந்து மதத்தில் மட்டும் அல்ல, மற்ற மதங்களிலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் தேவாலயங்கள்/மசூதிகளுக்குப் போகக்கூடாது, மற்றும் பைபில்/குரான் புத்தகங்களைத் தொடக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்தன. இது எதனால் இப்படி இருந்தது என்று நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும். இன்று நம் வசதிவாய்ப்புகள் பெருகிவிட்டன. கோடெக்ஸ், விஸ்பர் என்று பல ப்ரோடக்ட்ஸ் நம் வசம் இருக்கின்றன. நாம் நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அளவில் வசதிகளைச் செய்துக்கொண்டோம். ஆகையால் இன்று பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கூட, தேவாலயங்களுக்கோ, மசூதிக்கோ, இல்லை கோவிலுக்கோ செல்கின்றனர். அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று ஆகிவிட்டது.

மற்ற மதங்களை விட்டுவிடுவோம். இந்த பெண்களின் மாதவிடாயை தீட்டு என்றா நம் இந்து தர்மம் கூறுகிறது? மாதவிடாயின் போது பெண்கள் என்ன தீண்டத்தகாதவர்களாக கறுதப்படுகிறார்களா? மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு போகக்கூடாதா இல்லையா என்பதை முடிவு செய்ய நீ யாரு???? சாமி கும்பிடரது பெண்களுடைய உரிமை இல்லையா??? அவங்க கோவிலுக்கு போவாங்க போகாமலும் இருப்பாங்க, அதை கேட்க நீ யாரு??? – இப்படி எல்லாம் கேள்விகள் கேட்பவர்களுக்கு ஒரு இந்து பெண்ணாகிய நான் பதில் கொடுக்கிறேன். சற்று பொருமையாக இதை படித்து புரிந்துக்கொள்ளுங்கள். கோவில்கள் விஷயத்திற்குள் போவதற்கு முன்பு, இந்த மாதவிடாய் காலம் பற்றி கொஞ்சம் அவசியம் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆண்களும் கூட இதை தெரிந்துக்கொள்வது நல்லது.

மாதவிடாய் என்பதை சமஸ்கிரத மொழியில் “ரஜஸ் ஷ்ரவா” என்று அழைக்கப்படுகிறது. ‘ரஜஸ்’ என்பது இரத்தத்தைக் குறிக்கிறது, ரஜோ குனத்தையும் குறிக்கிறது. “ஷ்ரவா” என்பது ஓட்டத்தை குறிக்கிறது. அதாவது, இரத்தத்தின் ஓட்டம் (flow of blood) என்று எடுத்துக்கொள்ளலாம். இது ஏன் இவ்வாறு அழைக்கப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆயுர்வேத சாஸ்திரங்கள் மற்றும் மருத்துவ சாஸ்திரங்கள் பலவும் பெண்களின் மூன்று முக்கியமான உயிரியல் செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளன:

1) Menstruation – முதல் மாதவிடாய், அந்த காலங்களில் பெண்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணிக்காக்க என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான செய்முறைகள் மற்றும் மாதவிடாய் நிறைவு பெரும் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள்,
2) Pregnancy – கர்பினி பெண்களுக்கான பராமரிப்பு விஷயங்கள்,
3) Post-partum care – குழந்தை பெற்ற பிறகு பெண்கள் எப்படி தங்கள் உடல் நிலையை பேணிக்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்கள்.

இந்த சாஸ்திரங்களை எல்லாம் இயற்றியது ஆண்கள் தானே என்று நீங்கள் கேட்கலாம். அக்காலங்களில் எதுவுமே எழுத்து வடிவில் இல்லை என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். நம் முன்னோர்கள் எதையுமே எழுதி வைக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இந்த விஷயங்கள் அனைத்துமே வம்சாவழியாக (அதாவது தாயிடமிருந்து தன் பெண் குழந்தைக்கு) வாய் வார்த்தைகள் வழி (oral tradition) வந்த அறிவுரைகள் தான்.

இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome), ஹார்மோனின் சமமற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

43762245_10157048176646495_5714264467601096704_n

ஆனால் இந்த பிரச்சினைகள் எல்லாம் அக்காலத்து பெண்களுக்குச் சமாளிக்க கைவசம் ஆயுர்வேத ஞானம் இருந்தது. அறிவியல் என்ற ஒன்று வருவதற்கு முன்பே நம் முன்னோர்களுக்கு இந்த விஷயங்கள் அனைத்திலும் புரிதல் இருந்தது என்பது ஆச்சரியத்திற்குரியதே. இன்று, அறிவியலும் ஆயுர்வேதத்தை ஆதரிக்கிறது. அந்த வகையில் “Rajaswala Paricharya: Effect on Menstrual Cycle and Its Associated Symptoms” என்ற ஒரு அறிவியல் ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கு நல்ல விதமாக அமைந்துள்ளன.

இந்த ஆய்வில் 30 ஆரோக்கியமான பெண்கள் கலந்துக்கொண்டு ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் சில விதிமுறைகளை தங்களால் முடிந்தவரை ஒரு ஆறு மாதங்களுக்குப் பின்பற்றினர். அந்த விதிமுறைகள் இதோ:

1. உரத்த குறளில் பேசக்கூடாது. அதிகமாகவும் பேசக்கூடாது.
2. அதிக வேலை செய்யக்கூடாது, ஓடக்கூடாது, நீண்ட தூரம் நடக்கக்கூடது. ஓய்வு அவசியம். அதே சமயம் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரந்திருக்க கூடாது.
3. அளவாக உணவு உட்கொள்ள வேண்டும், எண்ணையில் பொரித்ததை சாப்பிடக்கூடாது. முடிந்தால் சைவ உணவு சாப்பிடவும்.
4. பகலில் தூங்கக் கூடாது.
5. உடல் உறவு வைத்துக்கொள்ள கூடாது.

இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட 30 பெண்களில், 24-25 பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரும் பிரச்சினைகள் நிறைவே குறைந்து காணப்பட்டது என்றனர். இந்த ஆய்வின் முடிவுகளை நீங்களே தேடி படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு பெண்ணின் உடலிலிருந்து 50-80மிலி இரத்தம் வெளியேற்றப்படுகிறது இந்த 3-5 நாட்களில். ஆகையால் அவளின் உடலில் இருக்கும் ரஜஸ் என்ற சக்தி குறைகிறது. இதற்காகவே பெண்கள் இந்த காலத்தில் அதிக வேலை பழு எடுத்துக்கொள்ள கூடாது என்று ஆயுர்வேதமும் அறிவியலும் கூறுகிறது. வாதம் மற்றும் கஃபம் தோஷங்களுக்கான நிவாரணத்திற்கே இந்த அறிவுரைகள். உடலில் அக்னி சக்தி குறைந்திருப்பதால் ஜீரன சக்தியும் குறைந்து இருக்கும். ஆகையால் தான் அதிகம் அஜீரனம் உருவாக்கும் உணவை உண்ண வேண்டாம் என்று கூறுகிறது நமது ஆயுர்வேதம். பத்திய உணவு சிறந்தது.

காலில் காயம் பட்டு இரத்தம் சிந்திய ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டு தன்னை எப்படி தேற்றிக்கொள்வாரோ, அதுபோல ரஜஸ் ஷ்ரவா என்பதும் கர்ப்பப்பையில் ஏற்பட்ட காயம் தான், அதற்கும் ஓய்வு தேவை என்று நமது ஆயுர்வேத சாஸ்திரம் கூறுகிறது. நமது உடலில் இருக்கும் வாதம் பித்தம் மற்றும் கஃபம் என்ற மூன்று தோஷங்களும் சமநிலையாக இருக்க வேண்டும் என்பது தான் ஆயுர்வேத சாஸ்திரத்தின் குறிக்கோள். மாதவிடாய் காலத்தில் இந்த தோஷங்கள் சம நிலையில் இருப்பதில்லை. அதை சரி செய்யத்தான் இந்த விதிமுறைகள்.

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

இந்த ரஜஸ்வல பரிசர்யத்தின் விதிமுறைகளில் எதிலுமே கோவிலுக்குப் போகக்கூடாது என்று கூறப்படவில்லை. ஆனாலும், நீங்கள் அனைவரும் கோவில் வழிபாடுகளைப் புரிந்துக்கொள்ள வேண்டும். வேத-ஆகம சாஸ்திரங்களின் விதிமுறைகளைப் பின்பற்றி, மந்திரங்களை ஓதி, பிரான ப்ரதிஷ்டை செய்து உருவாக்கிய கோவிலில், தினமும் மந்திரங்கள் ஓதப்படுகிறது. ஆகையால் நமது இந்து கோவில்கள் பலவும் மிக சக்திவாய்ந்தவை. இதை கோவிலுக்குச் சென்று வழிபடும் எந்த ஒரு இந்துவும் மறுக்க முடியாது.

கோவில் பூஜை புனஸ்காரங்களில் கலந்துக்கொள்வது அதிக வேலை பழுவை பெண்களுக்கு உருவாக்கும். அதுமட்டுமின்றி பெண்களின் உடலில் இருக்கும் அபான வாயு (காற்று) என்ற பிரான வாயு கீழ் நோக்கி செல்கிறது. இந்த அபான வாயு தான் ரஜஸ் ஷ்ரவா (menstruation) உருவாகக் காரணம். ஆனால், கோவில் பூஜைகளில் சுழலும் வாயு, நம் உடலில் இருக்கும் பிரான வாயுவை மேல் நோக்கி நகரச்செய்யும். ஆகையால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்வதாலோ அல்லது பூஜையில் கலந்துக்கொள்வதாலோ தீட்டு என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. இது பெண்களின் உடல் நலனைத்தான் பாதிக்கிறது, கோவிலுக்கு தீட்டு ஒன்றும் உண்டுபன்னாது.

44077000_10157048185576495_4537253582352678912_n

இதில் என்ன சிக்கல் என்றால், இது உடனே உணரக்கூடிய விஷயமும் அல்ல. நாம் எளிதில் உணரக்கூடிய விஷயங்களை நம்ப தயாராக உள்ளோம். ஆனால் சூக்‌ஷமமாக நிகழும் எதையும் உடனுக்குடனே உணர முடியாது. அதுபோல தான் இதுவும். இதனுடைய பாதிப்பு நீண்ட காலத்திற்கு பிறகு நம்மால் உணரமுடியும். இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லாததால் என்னாலும் இதை உறுதியாக சொல்ல முடியவில்லை. தனிப்பட்ட முறையில், என் மாதவிடாய் காலத்தின் போது நான் கொவிலுக்கும் செல்வதில்லை, வீட்டில் பூஜையும் செய்வதில்லை. ஆனால், மனதில் சிவபெருமானை நினைத்துக் கொண்டு தியானம் மட்டும் செய்வேன்.

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

மாதவிடாய் தீட்டு என்ற விஷயத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

சரி, நான் கேட்கிறேன். கடவுள எல்லா இடத்திலும் இருக்காரு என்பதால் நீங்கள் குழியல் அறையில் பூஜை செய்வீர்களா? இல்லை தானே? ஆகையால் தீட்டு என்பது, என்னைக் கேட்டால் “hygiene” என்று தான் சொல்வேன். சுத்தபத்தமாக இருப்பது. உடலளவிலும், பேச்சிலும், மனதளவிலும் சுத்தமாக இருப்பது. இது 24/7 கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை தர்ம விதி. இதை சமஸ்கிரதத்தில் ஷெளச்சம் (shaucam) என்று கூறுவர். இது அனைவரும், எல்லா மனித இனத்தினரும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை விதி. நான் சொல்வது சரியா?

ஆகையால், ஒரு பெண் உடலளவிலும், மனதளவிலும் சுத்தமாக நிம்மதியாக இருக்கிறேன் என்று உணர்ந்தால், அவள் நிச்சயமாக கோவிலுக்கு போவாள். அது மாதவிடாய் காலமாக இருந்தாலும் சரி. ஆனால், எனக்குத் தெரிந்து நிறைய பெண்கள் இந்த காலக்கட்டத்தில் கோவிலுக்குப் போவதில்லை. இதை அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும் என்பதுதான் என் கருத்து. பெண்களுக்கு எதுவும் புரியாது என்பது போல் முன் வந்து அறிவுரை கூறுபவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதில் முழு புரிதல் இல்லாமல் பொத்தாம்பொதுவாக அறிவுரை கூறவுதை தவிர்க்கவும்.

என்றுமே நமது இந்து கலாச்சாரம் மாதவிடாயை தீட்டு என்று பார்த்ததில்லை. முதல் மாதவிடாய் என்பது சந்தோஷமாக கொண்டாடக் கூடிய காலம். மஞ்சல் நீராட்டு விழா என்று ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் என்று ஏன் கொண்டாடுகிறார்கள்? ஏனென்றால் பெண்களுக்கு முதல் மாதவிடாயின் போது positive experiences கொடுக்க வேண்டும் என்பதற்காக இதை ஒரு கொண்டாட்டமாக நிகழ்த்தப்படுகிறது. இது பேசக்கூடாத தீட்டு என்ற விஷயமே கிடையாது. சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டிய விஷயம். நாம் Victorian கலாச்சாரத்தில் இருப்பவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

44067575_10157048176501495_8952421692819374080_n

இறுதியாக, ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொண்டு இந்த நீளமான பதிவை முடித்துக்கொள்கிறேன்.

“Women (possess) an unrivalled means of purification; they never become (entirely) impure. For month by month their temporary uncleanness removes their sins.” – Baudhayana Dharmasutra 2.2.4.4

ஒரு பெண் என்றுமே புனிதமானவள் என்பதை தான் நம் வேதங்களும், தர்ம சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆகையால், அவள் என்றைக்குமே தீட்டு ஆகிவிட முடியாது. 🙏

9 thoughts on “‘பெண்களின் மாதவிடாய் என்பது தீட்டு’ – உண்மை என்ன?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s